தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. போக்குவரத்து நெரிசல்.!

Advertisements

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறைகள் நிறைவடைந்து, பொதுமக்கள் சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்பினர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

மேலும் ஆயுத பூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையும் வந்ததால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் குடும்பத்துடன் சென்றிருந்தனர். இந்நிலையில், விடுமுறைகள் நிறைவடைந்து பொதுமக்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பியதால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சென்னை செல்வதற்கான பேருந்துகள் நிறுத்துமிடத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். முன்பதிவில்லா சிறப்பு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால், நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் முண்டியடித்து ஏறும் நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.இதே போல, திருப்பூர் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூரில் இருந்து கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. பேருந்து நிலையங்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதனிடையே, தென்மாவட்டங்களில் இருந்து கார்களிலும் ஏராளமானோர் சென்னை திரும்பியதால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதே போன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதலாக 2 வழிகள் திறக்கப்பட்டபோதும், கடும் நெரிசல் இருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டையில் இருந்து சிலாவட்டம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதையடுத்து, நெரிசலை குறைக்க, மேல்மருத்துவத்தூர் அருகே வந்தவாசி சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.இதனிடையே, தென்மாவட்டங்களில் இருந்து கார்களிலும் ஏராளமானோர் சென்னை திரும்பியதால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *