
பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
2வது நாளாகத் தொடரும் மீட்புப்பணி
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்காலிக மருத்துவமனை:
ஆறுகளில் பலரின் சடலங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அட்டமலை மற்றும் மற்றொரு கிராமமும் இந்த நிலச்சரிவால் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஓடும் சாலியாற்றில் பலரது சடலங்களும் கரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது, மீட்பு படையினர் நேற்று இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்து வரப்பட்ட 31 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது.
போதிய வெளிச்சம் இன்றியும், மழை மற்றும் மோசமான வானிலை இருந்தும் அவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர், இந்தக் கோர சம்பவத்தில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் எனப் பலரும் உயிரிழந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



