
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், நாடு திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 25 மீனவர்கள், கடந்த மாதம் விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று, மண்டபம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 25 மீனவர்களையும் கைது செய்தனர். அதோடு மீனவர்களின் படகுகள், வலைகள், பிடித்து மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீனவர்களை சிறையில் அடைத்தனர். இதனை தொடந்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் , வலியுறுத்தலின்படி இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்தது.
அதன்படி நாடு திரும்பிய 25 மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


