
மதுரை:
புதுக்கோட்டை அருகே சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகபர் அலி கடந்த 17-ந்தேதி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் விதிகளைப் பின்பற்றிப் பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை.
எனவே உடலைத் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யவும், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி அவரது மனைவி மரியம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரர் கணவர் உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, எக்ஸ்ரே எடுப்பது கூடுதல் ஆவணமாக அமையும் எனத் தெரிவித்தார்.
பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, ஜகபர் அலியின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து கொள்ளலாம் என்றார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு,
மனுதாரர் கணவர் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடலைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்கத் தேவையான வசதிகள் செய்ய வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய போலீஸ் பாதுகாப்புடன், ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட வேண்டும். எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
