
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசிமூலம் மருந்து செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்குச் சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார்.
மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்டபோது அவர் கூறியது,
வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது.
இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலைப் பெற்று கொண்டு சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர்.
