நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், நாளை சென்னையில் பெண் ரசிகைகளுக்காகத் தனி சந்திப்பு நிகழ்ச்சியை தனுஷ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,500 முதல் 3,000 பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக அடையாறு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடம் தேடப்பட்ட நிலையில், இறுதியாக ஓஎம்ஆர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ரசிகர் மன்றக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் நற்பணிகள் மூலம் தனது ரசிகர் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகக் கூறப்படும் தனுஷின் இந்த நடவடிக்கை, அவரது அரசியல் வருகை குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், ரசிகைகள் சந்திப்பு நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் கல்லூரி தவெக அமைச்சர் ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தனுஷின் நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த ரசிகைகள் சந்திப்பு அரசியல் நகர்வுக்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


