பொருளாதார ஒத்துழைப்பின் பயன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தஜிக்கிஸ்தான் நாட்டின் துசான்பே நகரில் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இன்று உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலையற்ற தன்மை உள்ளதாகக் கூறினார். தகராறுகள் மற்றும் புவி அரசியல் பதற்றங்களால் வழங்கல் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எரியாற்றல், உணவுப் பாதுகாப்பு ஆகியன கிடைக்குமா? என்று நாடுகள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். எத்தகைய பொருளாதார உடன்பாடாக இருந்தாலும் அது உறுப்பு நாடுகளுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். நாம் விநியோகச் சங்கிலிகளை இன்னும் அதிக மீள்தன்மை கொண்டவையாக மாற்ற வேண்டும் என்றும்,
வணிகம் மற்றும் முதலீட்டை மேலும் எளிதாக்க வேண்டும் என்றும், வளர்ச்சிக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. பொருளாதார ஒத்துழைப்பின் பயன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
வளர்ச்சிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம் என்றும், பயங்கரவாதத்தால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், முதலீடும் வணிகமும் பாதிக்கப்படுவதாகவும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்…



