குட்கா விற்றால் மரணத் தண்டனையா? TASMAC மது போதை இல்லையா?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை மாதத்தில் நாகர்கோவில் சிறைச்சாலையில், தூத்துக்குடிக் காவல்நிலையத்தில் என இரண்டு இடங்களில் காவல் சிறைக் கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன. சிறிய குற்றத்துக்காகக் கைது செய்யும் ஒருவரைச் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை. அதைச் செய்யாமல் கையூட்டு, இலஞ்சம் என்னும் எலும்புத் துண்டுக்காக வெறிநாய்களைப் போன்று நடந்துகொள்ளும் காவல்துறையின் நடவடிக்கை குறித்து விளக்குகிறது இந்த ஆய்வுத் தொகுப்பு….

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்பது 550ஆவது திருக்குறள்.

இது செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் வருகிறது. கொலை முதலிய கொடுஞ்செயல்களைச் செய்வோரை அரசன் தண்டித்தல், நெற்பயிரில் வளரும் களையைப் பிடுங்குதலுக்குச் சமம் என்பது இந்தக் குறளின் பொருளாகும். இது மன்னராட்சிக்கால இலக்கணம் ஆகும். ஆனால் இக்காலத்துக்கும் பொருந்தும். குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதிலும் மனித உரிமைகளைப் பார்க்கும் இக்காலத்திலும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னும் வகையிலான தண்டனை முறைகள் ஒருசில நாடுகளில் உள்ளன.
ஒருவரை அநியாயமாகக் கொன்றவனை, அதற்கான தண்டனையாக அரசு கொன்றுவிட்டால், அநியாயமாகக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் ஆறுதலடைவர்.
கண்ணாற்கண்ட சாட்சிகள் இல்லாதது, அச்சத்தால் யாரும் சாட்சி சொல்ல வராதது, சாட்சிகளையும் சான்றுகளையும் காவல்துறை கண்டுகொள்ளாதது ஆகியவற்றாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியாகவும் கொலையாளி தண்டனையில் இருந்து தப்புவது பாதிக்கப்பட்டவருக்கு ஏமாற்றத்தையும் மனவலியையும் ஏற்படுத்தும். இத்தகைய சூழலில்தான் பழிக்குப் பழி என்னும் பழிவாங்கல் உணர்வு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் எவையெல்லாம் போதைப்பொருள் என்பதை வரையறுப்பதில் அரசுக்கே இன்னும் போதை தெளியவில்லை. கஞ்சா, ஹெராயின், பிரவுன்சுகர், மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைப் போதைப்பொருள் என்கின்றனர்.
அதேபோல் பனங்கள், தென்னங்கள் ஆகியவற்றையும் போதைப்பொருள் என்கின்றனர். கழிவுச் சர்க்கரைப் பாகை ஊறவைத்து, நொதிக்க வைத்து, அந்த நொதியைக் கொதிக்க வைத்து வரும் நீராவியைக் குளிர வைத்துப் பெறும் நல்ல சாராயத்தையும் கள்ளச்சாராயம் என்று பெயரிட்டுப் போதைப் பொருள் என்கின்றனர். ஆனால் வேதிப்பொருட்களையும் சாயங்களையும் கலந்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டுச் சாராய வகைகள் என்னும் பெயரில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அரசியல்வாதிகளின் ஆலைகளில் தயாரித்த மது வகைகளையே TASMAC எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மொத்தமாகக் கொள்முதல் செய்து, மாநிலம் முழுவதும் உள்ள ஐயாயிரத்துக்கு மேற்பட்ட சில்லறைக் கடைகள் மூலம் விற்கிறது.
இந்த TASMAC கடைகளில் விற்கும் மது வகைகள் மட்டும் தமிழ்நாடு அரசுக்குப் போதைப்பொருளாகத் தெரியவில்லை. இவற்றைவிடச் சிறந்ததாக வெளியே வேறு யாரும் சாராயம் வடித்து விற்றாலும் குடித்தாலும் அது போதைப்பொருளாகும். அதேபோல் நாட்டின் பிற மாநிலங்களில் விற்கப்படும் குட்கா, கைனி, பான் மசாலா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தடை செய்யப்பட்டன. ஜெயலலிதா மறைந்தபின் அதே பொருட்களையே தடையை மீறி ஒளிவுமறைவாக விற்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, அப்போதைய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மாதம் 15 இலட்ச ரூபாய் என்கிற கணக்கில் பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றதாக அந்தப் பொருட்களின் மொத்த விற்பனையாளர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்பேட்டை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
இன்னும் மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கான தடை நீடிக்கிறது. அதேபோல் தடையை மீறித் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து விற்கப்படுகிறது. மது வகைகள், மெல்லும் புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான தடையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் பொறிகளாகக் காவல்துறை, வருவாய்த்துறை ஆகியன உள்ளன. “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என்று மதுப் பாட்டில்களில் எழுதப்பட்டுள்ளது. மதுக்கடையின் பெயர்ப்பலகையிலும் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கேடு விளைவிக்கும் மது வகைகளை ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் வழியாக மக்களுக்கு விற்பது தான் தமிழ்நாட்டு அரசின் முதற்கடமையாக இருக்கிறது.குட்கா, கைனி, பான் மசாலா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்கள் அண்டை மாநிலங்களில் தடை செய்யப்படாததால் அதில் குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதால் பல மடங்கு விலைகொடுத்தாவது வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர். இதனால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதால் கடத்தல்காரர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் அதிக இலாபம் கிடைக்கிறது. இடையில் பிடிபட்டாலும் கையூட்டுக் கொடுத்துத் தப்புகின்றனர். இவர்கள் பெருந்தொகையைக் கையூட்டாகக் கொடுத்தாலும் அது பலமுறை ஈட்டிய பெரும் இலாபத்தில் இருந்து ஒதுக்கும் சிறு தொகையாகவே அவர்களுக்கு உள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பதால் கிடைக்கும் தண்டனையைவிட, அவர்களுக்கு இலாபம் பெரிதாகத் தெரிவதால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் புழக்கம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், கடைகள், பொது இடங்கள், கழிவறைகள், ஆற்றோரங்கள், கடற்கரை என எங்கெங்குப் பார்த்தாலும் புகையிலைப் பொருட்களின் காலிப் பொட்டலங்கள் கிடப்பதே அது தங்கு தடையின்றி விற்கப்படுவதற்குச் சான்றாகும். தடையை மீறிப் புகையிலைப் பொருட்களை விற்பது குற்றம்தான். எனினும் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டில் பெட்டிக்கடையில் இந்தப் பொட்டலங்களை விற்றதாகக் கூறிச் சபரிவர்மன் என்னும் இளைஞரைக் காவல்துறையினர் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அவர் உயிரிழந்த நிலையில் அவரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உடற்கூறாய்வில் அவர் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
புகையிலைப் பொருட்கள் விற்றால் சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. கொலைத்தண்டனை இல்லை. அவரைக் கையும் களவுமாகப் பிடித்தால் நீதிமன்றத்தில் நிறுத்தி, அவர் குற்றத்தை மெய்ப்பிப்பதே காவல்துறையின் கடமையாகும். அவர் குற்றவாளியா? என்பதைத் தீர்மானித்துத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் கடமையாகும். வழக்கு விசாரணைக்கு முன்பே சிறையில் அடித்துக் கொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
புகையிலைப் பொருள் விற்றவரிடம் வழக்குப் பதியாமல் இருக்கப் பெருந்தொகையைக் கையூட்டாகக் காவல்துறையினர் கேட்டதாகவும், அதற்கு உடன்படாததால் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால், காவல்துறையினரின் நோக்கம் புகையிலைப் பொருட்களை ஒழிப்பதோ, தடையை மீறி விற்பவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதோ இல்லை. சட்டத்துக்குப் புறம்பான குற்றத்தைச் செய்தவர்களிடம் பெருந்தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு அவர்களைத் தண்டனையில் இருந்து தப்ப வைக்கும் முயற்சியாகும். இதில் விடுவிக்கப்படுபவர் சட்டத்துக்கு அஞ்சாமல் மீண்டும் புகையிலைப் பொருட்களை விற்கத் தொடங்குவார்.
அவர்களை விடுவிக்கக் காவல்துறையினர் பெறும் கையூட்டு, புகையிலை விற்பனை செய்யச் சட்டவிரோதமாகப் பெறும் உரிமத்துக்கான தொகை போலாகிறது. இதனால் ஒருபுறம் புகையிலைப் பொருள் விற்பனையும், மறுபுறம் ஊழலும் பெருகுகிறது. எப்படி இருப்பினும் சபரிவர்மன் புகையிலை விற்றதாகவே கொண்டாலும், அது நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப்படவில்லை, நீதிமன்றம் தண்டனை விதிக்கவில்லை, அதிலும் அத்தகைய குற்றத்துக்கு மரணத் தண்டனை கிடையாது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
தாய், தந்தை, மனைவி, மகன் என ஒரு குடும்பத்தையே காக்க வேண்டிய இளைஞனைக் கொடூரமாக அடித்துக் கொன்றதே தமிழ்நாட்டில் ஊழல் எவ்வளவு பெருகி ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது என்பதற்கும், காவல்துறையில் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் காக்கிச் சட்டை போட்டுக்கொண்டு உலவுகின்றனர் என்பதற்கும் சான்றாகும்.
சட்டவிரோதச் செயல்கள் செய்வதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், அதைக் கண்டறிந்து அவர்களிடம் கையூட்டுப் பெற்று அந்தச் செயல்களைப் பெருகச் செய்வது கன்னியாகுமரிக் காவல் படுகொலையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் போக்கு திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளது. இதை மாற்றிக் காட்டுவோம், மாற்றத்தை உருவாக்குவோம் என்று களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், இந்தக் காவல் கொட்டடிக் கொலைக்கு ஓர் இரங்கலோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. இது அவருடைய கல்நெஞ்சத்தைக் காட்டுகிறது.
ஒரு பெட்டிக்கடையில் 100 பொட்டலம் குட்கா விற்றவனுக்குக் கொலைத்தண்டனை என்றால், பல கோடி ரூபாய் கையூட்டுப்பெற்றுக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சட்டத்தை மீறி விற்றுக்கொள்ளத் தைரியம் கொடுத்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? அவனைத் தன் கட்சியில் சேர்த்துக்கொண்ட ஆளுங் கட்சித் தலைவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடலாம்… இதேபோல் தூத்துக்குடியில் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து பெட்டி பெட்டியாக மதுப் பாட்டில்களை வாங்கி வெளியே கொண்டுசென்று வீட்டில் வைத்து விற்ற அருணாசலம் என்கிற இளைஞரைக் காவல்துறையினர் தலையிலேயே இரத்தம் சிந்தும்படி அடித்துள்ளனர்.
தலையில் காயமடைந்து குற்றுயிரான அந்த இளைஞன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்.
அருணாசலத்தை இளம் வயதில் காவல்துறை அரக்கர்களிடம் பறிகொடுத்த அவரின் தாயும், உடன்பிறந்தானும் சோகத்தில் கதறி அழுதபோது, இதற்கு வெட்கப்பட வேண்டிய, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய, காவல்துறையினரின் அரக்கத்தனமான இத்தகைய போக்குக்குக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டிய முதலமைச்சரும் அமைச்சர்களும் அன்று ஜனநாயகன் திரைப்படத்தைக் கண்டு போலிக்கண்ணீர், நீலிக்கண்ணீர் வடித்ததில் வியப்பொன்றும் இல்லை.
இத்தனைக்கும் கடந்த திமுக ஆட்சியில் காவல் கொட்டடியில் கொல்லப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோரின் குடும்பத்தினரைச் சென்னைக்கு வரவழைத்துத் தவெக சார்பில் விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத் தக்கது. அப்போது நீதிகேட்ட விஜய், இப்போது இந்தப் படுகொலைக்குத் தொடர்புடைய காவல்துறையின் பொறுப்பையும் ஏற்ற முதலமைச்சராக உள்ளார். டாஸ்மாக்கில் விற்ற மதுப்பெட்டிகளை வெளியே கொண்டுவந்து அருணாசலம் விற்றது மெய்ப்பிக்கப்பட்டால் சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படும். ஆனால் குற்றத்தை மெய்ப்பிக்கு முன்னே அடித்துக் கொல்லப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை விசாரணை ஆணையம் வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும்.
நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடான மதுவை TASMAC கடையில் வைத்து விற்கும்போது மட்டும் அது போதைப்பொருள் இல்லையா? நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அந்தக் கடையில் விற்கும்போது வாங்கிக் குடித்தால் மட்டும் அதில் போதை வராதா? அந்த நேரம் தவிர மற்ற நேரத்தில் வெளியே விற்பது சட்டவிரோதமா? அருணாசலம் மது விற்றது குற்றமா? பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்றது குற்றமா? அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளிலேயே அதிகப்பட்சச் சில்லறை விலையைவிட அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் விற்பனையாளர்கள் மீது இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
மொத்தமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது குற்றம் என்றால் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு TASMAC மதுக்கடைக்குப் பின்னாலும் குறைந்தது பத்துச் சந்துக்கடைகளாவது உள்ளன.
TASMAC கடைகள் இல்லாத ஊரிலும், அது திறந்திருக்காத நேரத்திலும் எங்கும் எப்போதும் மது விற்பனை நடந்தே வருகிறது. அப்படி விற்கும் சட்டவிரோதச் சில்லறை விற்பனை நிலையங்கள் தண்டனைக்கு அஞ்சாததும் தொடர்ந்து பெருகுவதும் எதனால்? சட்டவிரோத விற்பனையாளரைப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்குப் பதில், அதையே ஒரு சாக்காக வைத்துச் சட்ட நடவடிக்கையில் இருந்து, வழக்கில் இருந்து தப்புவதற்கு ஒரு பெருந்தொகையைக் காவல்துறையினர் பெற்று விடுகின்றனர். இதைச் சட்டவிரோதமாக மது விற்பதற்கான சட்டவிரோதமான உரிமம் என்றே இந்தச் சில்லறை விற்பனையாளர்கள் கருதுகின்றனர். இந்தப் போக்கு இருக்கும் வரை சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவே முடியாது. வேலைவாய்ப்பில்லாத இந்த நாட்டில் சட்டவிரோத மது விற்பனை இன்னும் பெருகிக் கொண்டே போகும்.
இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. மதுவிற்பனையை அரசின் வருமானமாகக் கருதாமல் அவமானமாகக் கருத வேண்டும். மதுவால் வரும் வருமானத்தை விட, அதைக் குடிப்போரின் உடல்நலக் குறைவு, மது மயக்கத்தால் கடமை மறந்து போதையில் உழலும் தலைவனால் அந்தக் குடும்பம் வறுமையடைவது, மதுகுடித்த உடல்நலம் கெட்டு உயிரிழப்பதால் குடும்பம் தலைவனை இழந்து தவிப்பது, குடிவெறியில் செய்யும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவது, குடிவெறியில் வண்டி ஓட்டுவோர் மதிமயங்கித் தானே விபத்தில் சிக்கி உயிரிழப்பது, சாலைகளில் வரும் ஆட்கள், வாகனங்கள் மீது மோதிப் பிறரைக் கொல்வது இவற்றால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மிக மிக அதிகம். மது வருமானம், மதுவால் ஏற்படும் தீமைகள் இவை இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் முழு மதுவிலக்குக் கொண்டு வருவதன் தேவை நன்றாக விளங்கும்.
தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக தலைவர் இலவசங்கள், உதவித்தொகைகள் என முந்தைய திமுக, அதிமுகவினர் கூறிய உறுதிமொழிகளையே அள்ளி வீசினார். அவற்றைச் செயல்படுத்த முடியாமல் இப்போது திணறுகிறார்.திமுக, அதிமுக என இரு கட்சிகளும் செய்யாத ஒன்று என்றால் அது மதுவிலக்குத் தான். அதை நடைமுறைப்படுத்தவே முதல் கையொப்பம் இடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்த்துப் போனது. 717 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்து மூடப்பட்டதாகக் கூறினாலும், அது பொய்யா, மெய்யா? என்கிற ஐயம் எழுந்துள்ளது. அது மெய்யாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் மது விற்பனை குறையுமா? ஒரு கடையில் வாங்கியவன் அந்தக் கடை மூடப்பட்டால் திறந்திருக்கும் மற்றொரு கடையில் வாங்குவானேயொழியக் குடிப்பதை நிறுத்த மாட்டான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மந்தப்புத்தி உடையவர்கள் தான் மக்களை ஏமாற்ற இப்படியொரு திசை திருப்பும் உத்தியைக் கடைப்பிடிப்பர்.
அதைத் தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.அதனால் முழு மதுவிலக்கு கொண்டுவருவதாலும், புகையிலைப் பொருட்கள் தடையை முற்றாக நடைமுறைப்படுத்தினாலும் மட்டுமே, காவல்துறையினர் கையூட்டு, இலஞ்சம் வாங்கிக் கொழிப்பதையும், அதைக் கொடுக்காதவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொல்வதையும் தடுக்க முடியும். தமிழ்நாட்டுப் பெண்கள் மீது, குழந்தைகள் மீது, மாணவர்கள் மீது, தன் இரசிகர்கள் மீது, அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் மீது கொஞ்சமேனும் அக்கறை இருந்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய் இனியாவது இவையிரண்டையும் உடனே செய்து காட்டுவார்.
முழு மதுவிலக்கு, புகையிலைப்பொருட்கள் தடை இரண்டையும் நடைமுறைப்படுத்தா விட்டாலும், காவல்துறை இலஞ்சம், கையூட்டு வாங்குவதையும், மிரட்டிப் பணம் பறிப்பதையும் தடுக்காவிட்டாலும் அவருக்குத் தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சங்கூட அக்கறை இல்லை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *