கேரளாவின் புதிய முதல்வராகிறார் வி.டி.சதீசன்..!

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்க உள்ளார்.
கேரளத்தில் 2016, 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று இடது ஜனநாயக முன்னணி அரசு இருந்தது.

அப்போது காங்கிரசின் வி.டி.சதீசன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றுப் பத்தாண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

முதலமைச்சராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்த நிலையில், வி.டி.சதீசனை முதலமைச்சராகத் தேர்வு செய்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்துத் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளக் காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவைத் தாங்கள் வரவேற்பதாகவும், புதிய முதலமைச்சர் சதீசனுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

தில்லியில் இருந்து மேலிடப் பார்வையாளர்கள் வந்தபின் இன்று மாலை 4 மணிக்குக் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார். தன்னை முதலமைச்சர் பதவிக்கு அறிவித்துள்ளது பற்றிக் கருத்துக் கூறிய சதீசன், இதற்காக வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *