
ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதலின் உயிரிழப்பின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகை நடைபெற்றது. இதைக்காண நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா். இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்த தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். மேலும், 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை காவல் துறை அதிகாரிகள் சுட்டு உயிரிழக்கச் செய்தனர். இதையடுத்து, இரண்டாவது நபா் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் பிடிபட்டாா். இதை தொடர்ந்து, பயங்கரவாதிகளில் ஒருவரின் காரில் இருந்து வெடிகுண்டு ஒன்றும், சம்பவ இடத்தில் இருந்து சில சந்தேகத்துக்குரிய பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. தொடா்ந்து, அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. காயமடைந்த அனைவரும் அவசர ஊா்திகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



