
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி-ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி-ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 96 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல், அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். மேலும், முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளில், 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2024 ஜூன் மாதத்தில் 60-க்கும் அதிகமாகி விட்டன. கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்திருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 6 பேர் ஓய்வு பெற்றதால், காலியிடங்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை என்றும், அரசு கல்லூரிகளில், காலியாக உள்ள 9,000-க்கும் கூடுதலான முதல்வர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
