Government Hospital Virudhachalam: ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறும் அரசு மருத்துவமனை!

Advertisements

விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள்மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால்  நோயாளிகள் பாதிக்கப்படுவதாக  உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வளர்ந்து வரும் இன்றைய விஞ்ஞான உலகில், மக்களின் உணவு பழக்க, வழக்கங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப, நோய்களும் பெருகி வருகிறது. இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பு நகர பகுதிகளில் மட்டும் இருந்த மருத்துவமனைகள், தற்போது வீதிக்கு ஒன்று என்ற முறையில் பெருகி விட்டது.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், ஏழை, எளிய மக்கள் அனைவரும் நாடி செல்வது அரசு மருத்துவமனைகளையே.ஆனால் அடிப்படை வசதிகளில், அனைத்து அரசு மருத்துவமனைகளின் நிலையும், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

 

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனைக்கு, விருத்தாசலம் மட்டுமின்றி, திட்டக்குடி பெண்ணாடம், வேப்பூர், நெய்வேலி, மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாக இருக்கின்றனர்.

இங்கு பொதுமருத்துவம், மகப்பேறு, சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ், எக்ஸ்-ரே, சித்தா, கண் மருத்துவ பிரிவு, ரத்த வங்கி, யோகா பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

அவ்வாறு உள்ள விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும், நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே, அதிகரித்து வருகிறதே தவிர, அதற்கு ஏற்றது போல் மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பதால், நாள்தோறும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும், பெரும்பாலான நோயாளிகள், இருசக்கர வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வருவதாலும், நோயாளிகளைப் போலவே, இருசக்கர வாகனங்களும், மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவமனை செல்லும் வழி முழுவதும், தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால், நோயாளிகள் மட்டுமின்றி, அவசரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட, மருத்துவமனை உள்ளே வருவதற்கு, 15 நிமிடத்திற்கு மேல் ஆவதால், நோயாளிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு செல்கின்றனர்.

மேலும் காரில் வரக்கூடிய வசதி படைத்த நோயாளிகள், அரசு மருத்துவமனையில் உள்ளே நிறுத்த இடம் இல்லை என்பதை அறிந்தும், மருத்துவமனை வளாகத்தில் உள்ளே நிறுத்திக் கொள்வதால், போதிய இடவசதி இல்லாமல், நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும், கிடைக்கின்ற இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டு, மருத்துவர்களை பார்த்துவிட்டு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்ட இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தாமல், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நிறுத்திக் கொள்வதாகவும், நோயாளிகளை ஏற்றி வரும் ஆட்டோக்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் என அனைத்தும் மருத்துவமனை செல்லும் வழியில் தாறுமாறாக, நிறுத்திக் கொள்வதால், 24 மணி நேரமும், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை கடும் நெரிசல் ஏற்படக்கூடிய இடமாகவே உள்ளதாக நோயாளிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தவிர மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை எனவும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது எனவும், இரவு நேரங்களில் பெரும்பாலான மருத்துவர்கள் இருப்பதில்லை எனவும் நோயாளிகள் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதார துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் எனவும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *