
விஜய்யின் “கில்லி” திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்கத் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை: தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி.
இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாகக் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய், பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் எனப் படத்தின் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் காரில் பயணம் செய்யும்பொழுது அர்ஜுனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
கில்லி திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று இப்படம் வெளியாகி உள்ளது. எவர் கிரீன்” படமான கில்லி மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தைப் பார்க்கத் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.



