ஜெர்மனி கொடுத்த பொங்கல் பரிசு… இந்தியர்கள் குஷி!!

Advertisements

ஜெர்மனி அதிபர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.குஜராத்தின் ஆமதாபாத் நகரில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் உள்ள ஒத்துழைப்பை, ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக்-மெர்சுடன், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு செய்தார்.

பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்பை ஏற்று, ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக்-மெர்ஸ், இந்தியாவில் இரண்ட நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை இந்தியாவிற்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் ஆகிய இருவரும், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு காலை சென்று, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் இருவரும், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைத்து, பட்டம் விட்டும் மகிழ்ந்தனர். அதன்பின்னர், இரு தலைவர்களும், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கூட்ட அரங்கில், சமீபத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த, இந்திய-ஜெர்மனி மூலோபாய நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குறித்து மறுஆய்வு செய்தனர். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர், இரு தலைவர்களும், தங்களுடைய உயர்மட்ட குழுவினருடன், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார துறைக்கான செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் அகமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் ஜெர்மனி வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு தித்திப்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதாவது இந்தியர்கள் ஜெர்மனி வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது இனி விமான நிலைய போக்குவரத்து விசா (Airport Transit Visa) தேவையில்லை என்ற அறிவிப்பை ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு ஜெர்மன் வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஏனெனில் இந்தியர்கள் அமெரிக்கா, கனடா அல்லது இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும்போது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் அல்லது மியூனிச் ஆகிய விமான நிலையங்கள் வழியாக செல்வது வழக்கம். இதுவரை இந்தியர்கள் ஜெர்மனி விமான நிலையங்களில் ஒரு முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் அல்லது அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏர்போர்ட் டிரான்சிட் விசா வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இப்போது ஜெர்மனி வழியாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு விமான நிலைய போக்குவரத்து விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் ஜெர்மனி விமான நிலையங்களில் மற்ற வெளிநாட்டு விமான நிலையங்களை பிடிக்கும்போது தங்குவதற்கோ அல்லது வேறு ஒரு முனையத்துக்கு செல்வதற்கோ ஏர்போர்ட் டிரான்சிட் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை.

இதன்மூலம் இனிமேல் இந்தியர்களுக்கு ஏர்போர்ட் டிரான்சிட் விசா எடுப்பதற்கான பணம் மிச்சமாகும். மேலும் ஏர்போர்ட் டிரான்சிட் விசா கிடைக்காதோ என்ற பயம் இனிமேல் இல்லை என்பதால் கடைசி நேரத்தில் புக் செய்து நெருக்கடியின்றி பயணிக்கலாம். ஜெர்மனி அதிபரின் இந்த சூப்பரான அறிவிப்புக்காக பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அறிவித்ததற்காக அதிபர் மெர்ஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு படி” என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *