
காசாவில் மக்களுக்கு மனிதநேய உதவிப்பொருட்கள் வழங்குமிடங்களில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் கடந்த ஆறு வாரங்களில் 798 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா நகரம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. வீடுகளை இழந்துள்ள ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளிலும், விளையாட்டு அரங்கங்களிலும் பொது இடங்களிலும் புகலிடம் தேடியுள்ளனர்.
போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் அவர்கள் கூடாரங்களை அமைத்துத் தங்கியுள்ளனர்.
போதிய உணவுகள் கிடைக்காமல் பட்டினியில் ஆயிரக்கணக்கானோர் இறந்துபோவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் காசாவில் அமெரிக்ககா இஸ்ரேல் மனிதநேய அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இத்தகைய உதவி மையங்களுக்குச் சென்று வரிசையில் நின்று உணவைப் பெறுவோர் மீதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இவ்வாறு கடந்த ஆறு வாரங்களில் நடந்த தாக்குதல்களில் மட்டும் 798 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.


