
புதுடில்லி:
‘ராஜ்யசபா காங்., எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது’ என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
ர்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளிலிருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,06) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை டிசம்பர் 9ம் தேதி காலை 11 மணிவரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
ராஜ்யசபா அவை கூடியது, தெலுங்கானாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வி மீது ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியதாவது: காங்., எம்.பி., அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கிய இருக்கையிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவிற்குள் பணம் வந்தது எப்படி? பின்னணியில் வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பின் நடந்த சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ‘விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்‘ என வலியுறுத்தினார்.
ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா கூறியது, இந்தச் சம்பவம் தீவிரமானது. இது சபையின் கண்ணியத்தை புண்படுத்துகிறது. விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவை தலைவர் கூறியதால், உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார்.
நான் நேற்று ராஜ்யசபாவுக்கு செல்லும்போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே எடுத்துச் சென்றேன். 12.57 மணிக்கு அவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை கலைந்து விட்டது. 1.30 மணிவரை கேண்டீனில் இருந்தேன். அதன் பிறகு பார்லிமென்டிலிருந்து கிளம்பிவிட்டேன். இந்த விவகாரம்பற்றி, இப்போது தான் முதல்முறையாகக் கேள்வி படுகிறேன்.
ஒவ்வொரும் எம்.பி., யும் இருக்கையைப் பூட்டி சாவி எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கை இருந்தால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நடந்து இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். இதுகுறித்து தவறு இருந்தால் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரபல வக்கீலான அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் முக்கிய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகுபவர் என்பதை குறிப்பிடத்தக்கது.

