உமர்(ரலி) அவர்களின் ஆட்சியை முன்னுதாரணமாகப் பின்பற்ற வேண்டும் என்று காந்தி அடிகளே கூறியிருந்தார்.
14 நூற்றாண்டுகளையும் கடந்து உலகில் வரலாற்று ஆசிரியர்களாலும், அரசியல் ஆளுமைகளாலும், மதத் தலைவர்களாலும் உன்னதமாகப் போற்றப்படுவது உமர் அவர்களின் ஆட்சி முறை தான். ஒருமுறை சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியை முன்னுதாரணமாகப் பின்பற்ற வேண்டும் என்று காந்தி அடிகளே கூறியிருந்தார்.
மிகச் சாதாரணமாகத் தொடங்கிய உமர்(ரலி) வாழ்க்கை, வியாபாரம், வீரம், கல்வி, அறிவாற்றலால் பல நூற்றாண்டுகளையும் கடந்து புகழ வைத்துள்ளது. ஆளுமைக்கு அவர் தான் சிறந்த உதாரணம் என்று கூறும் அளவுக்கு உமரின் ஆட்சியில் நீதி கடைப்பிடிக்கப்பட்டது. நீதிக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய உமர்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தனது குடிமக்களின் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி ஒருநாள் இரவு மதினா நகரில் தனது உதவியாளருடன் உமர்(ரலி) அவர்கள் நகர்வலம் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மிகவும் எளிமையான வீட்டில் விளக்கு வெளிச்சமும், அதற்குள் குழந்தைகளின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே அந்தக் குடிசையை நெருங்கியபோது கலிஃபா உமர்(ரலி) அவர்கள், வீட்டிற்குள் ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்து கொண்டிருப்பதையும், அவருக்கு அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
உடனே, கலிஃபா உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணிற்கு சலாம் சொல்லி அவரின் அனுமதி பெற்று வீட்டிற்குள் சென்றார்கள். அதுவரை அந்தப் பெண் ஆட்சியாளராக இருந்த உமர்(ரலி) அவர்களைப் பார்த்ததில்லை. அதனால் வந்திருப்பவர் கலிஃபா என்பதையும் அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை.
குடிசைக்குள் சென்ற கலிஃபா உமர்(ரலி) அவர்கள், குழந்தைகள் ஏன் அழுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணோ, பசியோடு இருப்பதால் குழந்தைகள் அழுகின்றன எனப் பதிலளித்துள்ளார். உடனே, அடுப்பில் என்ன சமைக்கிறீர்கள் என கலிஃபா உமர்(ரலி) அவர்கள் கேட்டுள்ளார். அதற்குச் சுடுநீரில், சில கற்களைப் போட்டுச் சமைக்கிறேன் என அந்தப் பெண் பதிலளித்துள்ளார். அதைக் கேட்ட கலிஃபா உமர்( ரலி) அவர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.
வெறும் சுடுநீரில் ஏன் கற்களைப் பொட்டு சமைக்க வேண்டும் எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணோ, வறுமையால் வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை. குழந்தைகள் பசியில் அழுகின்றன. இப்படி செய்தால் அடுப்பில் நான் ஏதோ சமைத்து கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் தூங்கி விடுவார்கள் எனப் பதிலளித்துள்ளார்.
மேலும், இப்படிப்பட்ட வறுமையான சூழலில் எங்களுக்கு உதவி செய்யாத ஆட்சியாளரான கலிஃபா உமர்( ரலி) அவர்களையே நான் குறை கூறுவேன். இதற்காக இறுதி நாளன்று, கலிஃபா உமர்( ரலி) அவர்களுக்கும், எனக்கு இடையே அல்லாஹ் தான் நல்ல தீர்ப்பை வழங்குவானென அந்தப் பெண் கூறினார். இதைக் கேட்ட கலிஃபா உமர்(ரலி) அவர்கள் பதறினார். கண்களில் கண்ணீருடன் பேசிய கலிஃபா உமர்(ரலி) அவர்கள், அல்லாஹ் உன்மீது கிருபை செய்வானாகா! உமது துன்பமான நிலையை உமர் எப்படி அறிவார்? என வினவினார். அதற்கு, முஸ்லீம்களின் தலைவனாக ஆட்சி செய்யும் கலிஃபா உமர்(ரலி) எங்கள் இந்நிலையை அறிந்திருக்க வேண்டாமா? எனப் பதில் கேள்வி எழுப்பினார்.
இதனால், அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிய உமர், பைத்துல் மாலுக்கு விரைந்தார். அங்கு ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீச்சம் பழங்கள், துணிமணிகள், பணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு தனது உதவியாளரை அழைத்து அந்த மூட்டையை தன் முதுகில் தூக்கி வைக்கும்படி கூறினார். அதைக் கேட்ட உதவியாளர் அதிர்ந்தார். இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேன் என உதவியாளர் சொல்லியும் அதை மறுத்த கலிஃபா உமர்(ரலி) அவர்கள், தீர்ப்பு நாளில் என் சுமையை உம்மால் சுமக்க முடியுமா? அல்லது அந்தப் பெண் கேள்வி எழுப்பப் போவது என்மீது தானே? அதனால், நானே மூட்டையை சுமர்க்கிறேன் என்றார். பின்னர் அந்த மூட்டையை தோலில் சுமந்தபடி, நடையும் ஓட்டமுமாகச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தார் கலிஃபா உமர்(ரலி). அவரை உதவியாளர்கள்பின் தொடர்ந்து சென்றனர்.
அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற உமர் தானே அடுப்பு மூட்டி மாவு, நெய், பேரீச்சம் பழங்களை வைத்து உணவு சமைத்து அங்கிருந்த குழந்தைகளுக்கும், அந்தப் பெண்ணிற்கும் கொடுத்தார். மீதமான உணவை அடுத்தவேளை வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார். அந்தப் பெண்ணிடம் பேசிய உமர், குடும்பத்தைப் பராமரிப்பவர் யாரும் இல்லையா என வினவினார்.
அதற்குக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும், அவர்களுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்றும், வீட்டில் இருந்த உணவுகளும் தீர்ந்து பட்டினி கிடந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், உமரின் உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண், உங்களின் கருணை செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு நீங்கள் தான் சரியானவர் என்றுள்ளார். அப்போதும் வந்திருப்பவர் தான் கலிஃபா உமர்(ரலி) என்பது அந்தப் பெண்ணிற்கு தெரியவில்லை. உமரும் தன்னை பற்றிக் கூறாமல் அமைதியாக அமர்ந்து சாப்பிட்ட சந்தோஷத்தில் குழந்தைகள் விளையாடுவதை பார்த்து விட்டு, சென்றார்.
பின்னர் மதினா திரும்பிச் செல்லும் வழியில் உதவியாளரிடம் பேசிய கலிஃபா உமர்( ரலி) அவர்கள், அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாகச் சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன் என்றார். இப்படி தான், வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள்மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள். இது போன்ற கலிஃப உமர் (ரலி) வாழ்க்கையில் நடந்த ஆயிரம் உருக்கமான சம்பவங்கள் அவரைச் சிறந்த ஆட்சியாளர் எனப் போற்ற வைக்கிறது.