G. K. Vasan: நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது!

தேர்தல் அறிவிப்பிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்வது சில எதிர்க்கட்சிகளுடைய உள்நோக்கமாக இருக்கும்என்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைப் பட்ஜெட்டில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அடுத்த புழலில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் வெற்றி யூகங்கள் குறித்தும், உட்கட்சி ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், வருகின்ற நாட்களிலே கூட்டணிகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பைத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்றார். சைக்கிள் சின்னம் பெற வேண்டும் என்ற எங்களுடைய கட்சியினுடைய உரிமையை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளதாகவும் நல்லது நடக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் பொது பட்ஜெட், விவசாய பட்ஜெட் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்றார். மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கத் தவறிய பட்ஜெட் எனவும், விவசாயி சேற்றிலே கால் வைத்தால் தான் நாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்று இந்த அரசு விவசாய பட்ஜெட்டை உணர்ந்து செயல்படுத்தவில்லை என்று சாடினார்.

மேகதாது அணையிலே காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அணை கட்டக்கூடிய பணிகளை மேற்கொள்ளக்கூடிய நிலைகளை அவர்களது பட்ஜெட்டிலே அறிவிக்கும்போது, தமிழக அரசு அதனை எதிர்க்கத் தவறியது கூட்டணி அரசியல், வாக்கு வங்கி அரசியல் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் மறந்து விவசாயிகளை நினைவு கூர்ந்து விவசாயம் சார்ந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலே ஈடுபட வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயளுடைய ஒருமித்த கருத்தாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுடைய எண்ணங்களை அகில இந்திய அளவிலே பிரதிபலிக்கக்கூடிய வகையில் பல விதமான ஆலோசனைகளை விவசாய சங்கங்களிடம் பேசிப் பயன் தரும் பல அறிவிப்புகளை விவசாயிகளுடைய நலன் கருதி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் அறிவிக்கக்கூடிய இரண்டு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்வது சில எதிர்க்கட்சிகளுடைய உள்நோக்கமாக இருக்கும் என்ற கருத்து நிலவுவதாகச் சாடினார்.

எனினும் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்து அதைக் கனிவோடு நிச்சயமாக அவர்களைக் கோரிக்கையை நிறைவேற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது எனவும், விவசாயிகள் எதிர்க்கட்சிகளுடைய சூழ்ச்சியிலே அகப்படக் கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் எனவும் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டார். தலைநகரில் போராடும் விவசாயிகள்மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தாக்குதல்கள்குறித்த கேள்விக்கு ஜி.கே.வாசன் பதிலளிக்க மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *