
போலி கையெழுத்து போட்டுப் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய பங்குதொகை ரூ.75 கோடியை மோசடி செய்து தம்பதியைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (58). செல்வகுமார் சகோதரர் சீனிவாசன், அவரது மனைவி பிரமிளா மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் காந்திபுரம் பகுதியில் உள்ள வாகன உதிரி பாகம் விற்பனை நிலையத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இதனைச் சீனிவாசன் அவரது மனைவி பிரமிளா ஆகிய இருவரும் முழுநேரமாகக் கவனித்து வந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகளை மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றி நஞ்சப்பா ரோட்டில் சீனிவாசன் மற்றும் பிரமிளா ஆகியோர் புதிதாக மற்றொரு வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், செல்வகுமார் நிறுவனத்தின் வரவு, செலவுக் கணக்குகளை ஆராய்ந்தார். அதில், சீனிவாசனும், பிரமிளாவும் பங்குதாரர்களின் பங்குகளைப் போலி கையெழுத்து போட்டு வங்கியில் கடன் பெற்று புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியது தெரியவந்தது.
இதன்மூலம், இருவரும் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய பங்குதொகை ரூ.75 கோடியை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன், பிரமிளா மற்றும் 2 தனியார் வங்கி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

