
தமிழகத்தில் இன்னும் பல அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள், திமுகவுக்கு இனி இறங்குமுகம்தானெனச் சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசுகையில் கடுமையாகத் தாக்கினார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக., அரசு செயலற்று காணப்படுகிறது. பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார்.
இந்த ஆட்சியில் ஊழல் செய்வதில் சாதனை படைக்கின்றனர். கலெக்சன், கமிஷன், கரப்சன் ஆகியவற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் இல்லாத துறையே கிடையாது. ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க., அரசு. நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் புது பிரச்னை உருவாக்கி விடக் கூடாது என்ற நினைப்போடு கண்விழிக்கின்றேன் என முதல்வர் கூறுகிறார். அப்படிஎன்றால், எவ்வளவு அராஜகம் நடக்கிறது.
எப்படி நாட்டிற்கு நல்லது நடக்கும். கட்சியினரை பற்றிப் புலம்பிவிட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும். ஸ்டாலினுக்கு கட்சி நடத்த தெரியவில்லை. ஆட்சி நடத்த தெரியவில்லை. இதனால், செயலற்ற முதல்வர் எனப் பேசப்படுகிறது. பொம்மை முதல்வர் எனக் கூறுகிறோம்.
அண்மையில் நீதிமன்றத்தின் மூலம் ஒரு அமைச்சருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. இன்னும் பலருக்கு தண்டனை கிடைக்க உள்ளது. சட்டசபையின் முன்வரிசை அமைச்சர்கள் சிறைக்கு போய் விடுவர். அவர்கள் மக்களைப் பார்க்கவில்லை. தண்டனை எப்போது வரும் என நீதிமன்றத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன் பலர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.
ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். அவரை அமைச்சராகப் பார்ப்பதா அல்லது கைதியாகப் பார்ப்பதா? இதுகுறித்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபிறகும், சூடு சொரணை இல்லை. அவரை விடுவித்தால், வெளியில் விட்டால், முதல்வர் இடத்திற்கு இவர் போய்விடுவார். அதனால், தான் மவுனம் காக்கிறார்.
திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி எப்போது வரும் எனக் குரல் ஒலிக்கிறது. இது யதார்த்த நிலை. மக்கள் எண்ணம் தெளிவாக உள்ளது. அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. புயல், வெள்ள பாதிப்பு காலத்தில் அதிமுக., அரசு செவ்வனே பணியாற்றியது. தி.மு.க., ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆட்சி நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது. மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


