
விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இரண்டு பேர் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆகியோர், நிவாரண உதவிகளை வழங்கினர். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் விளைச்சல் மற்றும் அறுவடை கணக்கில் கொண்டு தற்போது 33 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். கொள்முதல் நிலையங்களில் தலா ஆயிரம் மூட்டைகள் கொள்ளளவுக்காண இடவசதி உள்ளது என்றும் நெல் வரத்து அதிகமானால் உடனடியாக நெல் மூட்டைகள் குடோன்களுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் கொள்முதல் பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை ஏழு நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதால் இடைத்தரகர்களை நம்பி குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.



