தாம்பரம் விமானப்படை தளத்தில் பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசம்!
தாம்பரம்: தாம்பரம் விமானப்படை தளத்தில் இன்று காலை போர் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹால், எச்டி2, ப்லட்டஸ், கிரண், எம்ஐ-17, டோமியர் உள்ளிட்ட போர் விமானங்களில் விமானிகள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். மேலும், 9 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 9 விமானப்படை வீரர்கள் மூவர்ண கொடி நிறத்திலான பாராசூட் மூலம் கீழிறங்கி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இதில் 2 விமானப்படை வீரர்கள் கைகளை கோர்த்தபடி, பாராசூட்டிலிருந்து கீழே குதித்து சாகசத்தில் ஈடுபட்டது, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியக்க வைத்தது. மேலும், விமான சாகசத்தின்போது விமானங்கள் தாழ்வாக பறந்தது, வானில் குட்டிக்கரணம் அடித்தபடி சுற்றி வந்ததை அனைவரும் கண்டு ரசித்தனர். இதில் விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் ரசித்தனர்.