Female doctor murder case: அடிபணிந்த மம்தா பானர்ஜி..கோல்கட்டா போலீஸ் கமிஷனர் நீக்கம்..!

Advertisements

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களின் கோரிக்கையை ஏற்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கவங்க மாநிலத்தில் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோரை சமீபத்தில் கைது செய்தனர்.

இதற்கிடையே, பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, ஒரு மாதத்துக்கும் மேல் கோல்கட்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களைப் பேச்சுக்கு முதல்வர் மம்தா அழைத்தார்; பல்வேறு நிபந்தனைகளால் அவர்கள் வரவில்லை. நான்கு முறை பேச்சுக்கு அழைத்தும் டாக்டர்கள் வராததால் முதல்வர் மம்தா அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், பேச்சுக்கு வரும்படி ஐந்தாவது முறையாக நேற்று, பயிற்சி டாக்டர்களுக்கு முதல்வர் மம்தா அழைப்பு விடுத்தார். இதை டாக்டர்கள் ஏற்றனர். இதன்படி, கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள முதல்வர் மம்தாவின் வீட்டுக்கு, மாலை 6:20 மணிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 30 பயிற்சி டாக்டர்கள் வந்தனர். மாலை 5:00 மணிக்குப் பேச்சுக்குத் திட்டமிடப்பட்ட நிலையில், பயிற்சி டாக்டர்கள் தாமதமாக வந்தனர்.

முதல்வர் மம்தா – பயிற்சி டாக்டர்கள் இடையேயான பேச்சு, இரவு 7:00 மணிக்குத் துவங்கி, 9:00 மணிக்கு முடிவடைந்தது. அப்போது, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மம்தாவிடம் டாக்டர்கள் வழங்கினர். இதையடுத்து . பேச்சுவார்த்தை இரவுவரை நீடித்த நிலையில், பயிற்சி டாக்டர்கள் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில், மூன்றை ஏற்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா கூறியதாவது: சுகாதாரத்துறையின் மருத்துவ பணிக்குழு இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் ஆகிய இரண்டு உயரதிகாரிகள் நீக்க முடிவு செய்துள்ளோம். கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், தான் பதவியில் தொடர போவதில்லையெனக் கூறியுள்ளார்.

எனவே, புதிய போலீஸ் கமிஷனர் இன்று நியமிக்கப்படுவார்; இதேபோல், கோல்கட்டா வடக்கு துணை போலீஸ் கமிஷனரையும் நீக்க முடிவு செய்துள்ளோம். போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி டாக்டர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றார்.

டாக்டர்கள் கோரிக்கை என்ன?

* பயிற்சி பெண் டாக்டரைப் பலாத்காரம் செய்தவர்கள் மற்றும் சாட்சியங்களை அழித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

* ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் சுகாதார செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் ராஜினாமா செய்ய வேண்டும்.

* சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

* அரசு சுகாதார நிறுவனங்களில் நிலவும் அச்சுறுத்தல் கலாசாரத்தை ஒழித்தல் வேணடும். உள்ளிட்ட கோரிக்கைகளை டாக்டர்கள் வலியுறுத்தினர். முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக முதல்வர் மம்தா தெரிவித்தார்.இதன் மூலம் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *