
திருவண்ணாமலையில் ஸ்ரீ வீர ஆஞ்சிநேயர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாகக் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே களம்பூர் பேரூராட்சி ஆரணியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வீரஆஞ்சிநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புனித நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை கலசங்கள் மீது ஊற்றி யாகசாலை பூஜை சிறப்பாக நடை பெற்றது. இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க நான்காம் பூஜையான திரவிய ஹோமம், கணபதி ஹோமம், உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் வைத்துப் பூஜித்த புனித நீரை வீதி உலாவாகக் கொண்டு வந்து ஆலயத்தின் ராஜ கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் மீது ஊற்றியும், 30அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலைமீது புனித நீரை ஊற்றியும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் ஆரணி எம்.பி.தரணிவேந்தன் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்று ஸ்ரீ ஆஞ்சிநேயரை வணங்கி வழிபட்டனர். இறுதியில் ஆலய நிர்வாகிகள் சார்பில் பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கபட்டன.



