
கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற உள்ள பரப்புரையில் புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.
பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், அதன்பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக பொதுவெளியில் மக்களை விஜய் சந்திக்க உள்ள ஈரோடு கூட்டத்திற்கு 43 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கரூரில், நகரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் குறுகலான தெருவில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
இதனால், மூங்கில்பாளையத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை சுற்றி நான்கு புறமும் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சாலை வழியாக விஜய் சென்றபோது, பல்வேறு வாகனங்கள் அவரது பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்றன.
இதனை தவிர்க்கும் வகையில், விஜயின் வாகனத்தை 10 வாகனங்கள் மட்டும் பின்தொடர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசலில் பெண்கள் அதிக அளவில் உயிரிழந்த நிலையில், இம்முறை விஜய் சந்திப்பில், பெண்களுக்கென்று தனி பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள மேற்கூரை அமைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் எதுவும் பிரத்யேகமாக நிறுவப்படவில்லை. ஆனால், இம்முறை போதுமான CCTV கேமராக்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிக்க அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கரூரில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 வரை பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.அதே சமயம், ஈரோட்டில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு என கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


