
சென்னை: நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் உடனான கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகவும் வருத்தப்பட்டு பேசியதாகவும், தேர்தலில் கிட்டத்தட்ட நிர்வாகிகள் அனைவரும் தன்னை ஏமாற்றி விட்டனர் என்ற ரீதியிலேயே பேசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்தது. அடுத்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக இருந்த அரசியல் தலைவர்கள் தற்போது வெற்றி நிலவரம், தேர்தலில் வேலை செய்தவர்கள் யார், வேலை செய்யாதவர்கள் யாரென நிர்வாகிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர் தலைமை அதிருப்தி: அந்த வகையில் அதிமுகவில் மிகப்பெரிய சர்ச்சைகள் முளைத்திருப்பதாக ஏற்கனவே ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் விரிவாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. அதிமுக மாவட்ட செயலாளர்மீது தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் விரைவில் அவர்களை அழைத்து விளக்கம் கேட்க முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டிருந்தோம். சொன்னது போலவே நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்களை நோக்கி வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.
இரு பிரிவுகள்: கட்சிக்குள்ளேயே இரு பிரிவுகளாகப் பிரிந்து அதிமுக நிர்வாகிகள் எதிர் எதிர் அணிகளாகச் செயல்பட்டதால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் குறிப்பாகத் திருவள்ளூர் மத்திய சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைமையகங்களில் பணியாற்றிய மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட தேர்தலில் ஒழுங்காகப் பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் கூட்டணி கட்சியினரும் தங்களுக்கு உரிய முறையில் அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை அழுத்தமாகவே எடப்பாடி பழனிச்சாமி இடம் பதிவு செய்திருந்த நிலையில் அதுவும் அந்தக் கூட்டத்தில் எதிரொலித்திருக்கிறது.
ஏமாற்றமும் வருத்தமும்: இது தொடர்பாக நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள் எடப்பாடியின் பேச்சில் கோபம் இல்லாவிட்டாலும் ஏமாற்றமும் வருத்தமும் இருந்ததை பார்க்க முடிந்தது என்றனர். ஜெயலலிதா இருந்தபோது இருந்த விசுவாசம் தற்போது தலைமையிடம் இல்லையென வருத்தம் மிகுந்த வார்த்தைகளை எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சென்னையில் சொத்து வரி உள்ளிட்ட பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையிலும் சென்னையில் மூன்று தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றால் அதிமுக நிர்வாகிகள் ஒழுங்காகப் பணியாற்றவில்லை என்று தானே அர்த்தம்.
வெற்றி வாய்ப்பு: இதையெல்லாம் மக்களிடம் பிரச்சாரத்தின்போது கொண்டு சென்றிருந்தாலே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒவ்வொரு தொகுதிகளுக்கும் இருக்கும் பிரச்சினைகளைக் குறிப்பிட்ட அளவு தான் நான் பிரச்சாரத்தின்போது பேச முடியும். உள்ளூர் பிரச்சனைகுறித்து நீங்கள் தானே பேசி இருக்க வேண்டும். பல இடங்களில் தலைமை கொடுத்த பணத்தை கூட நீங்கள் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு வழங்கவில்லையெனச் செய்திகள் வந்திருக்கிறது. கூட்டணிக் கட்சியினருக்கு தேர்தல் செலவுக்குப் பணம் அதிமுகவிலிருந்து கொடுக்கப்பட்ட போதும் உள்ளூர் நிர்வாகிகள் அதனை ஒழுங்காகக் கொண்டு சேர்க்கவில்லை. மாவட்ட செயலாளர்கள்: சில கூட்டணி கட்சிகள் தங்களிடம் பெற்ற பணத்தையும் செலவு செய்யாமல் வைத்து விட்டன. இதனால் இரு பக்கமும் சிக்கல் முளைத்ததால் அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் கடுமையான சவால் இருக்கும் எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் காரணம்.. கூட்டணி கட்சிகள் ஒழுங்காகச் செலவு செய்யவில்லை என்றாலும் என்னிடம் சொல்லி இருக்கலாமேயென வருத்தத்துடனே பேசியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே நாம் சொல்லியிருந்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கூட மாவட்ட செயலாளர்கள் ஒழுங்காகப் பணியாற்ற வில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
ஒத்துழைக்கவில்லை: மேலும் கட்சி தலைமை வழங்கிய பணத்தை கீழ்மட்ட நிர்வாகிகளுக்குக் கொடுக்கவில்லை.. அது மட்டும் அல்லாமல் கூட்டணியினருக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இதனால் சென்னை மண்டலத்தைப் போலத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களை அழைத்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிவதோடு அவர்களுடைய குறைகளையும் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி பேசுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மட்டம் போட்ட மாவட்ட செயலாளர்கள் சற்றே அச்சத்தில் உள்ளதாகவும் பேசப்படுகிறது.


