
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அன்னதானத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களைப் பங்கேற்கவோ, கோவிலுக்குள் நுழையவோ மறுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அண்ணாவின் நினைவு நாளில், அவர் தொடங்கிய கட்சியைக் கைப்பற்றியுள்ள ஒரு குடும்பம் நடத்தும் ஆட்சியில், பட்டவர்த்தனமாகத் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதைக் கண்டித்துள்ளார்.
கோவிலுக்குள் நுழையவிடாமல் பட்டியல் சமூகச் சிறுவர்களைத் “தீட்டு” பார்த்திருப்பது தான் திமுக மாடலா? என்றும் வினவியுள்ளார். சிறுவர்களை மிரட்டி அனுப்பியிருப்பதாகச் சிறுமி வேதனையோடு தெரிவிக்கும் காணொலி நவீனத் தீண்டாமையின் உச்சப்பட்சக் கொடூரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரைச் சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து, முதல்வர் உட்பட அனைவரும் மரியாதை செலுத்தி அழகு பார்த்த இயக்கம் அதிமுக என்று சுட்டிக்காட்டியுள்ளார்.திமுக ஆட்சியிலோ, பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கும் ஒரு சபையில், தீண்டாமை நடந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்ணா நினைவு நாளில், ஏழை எளிய குழந்தைகளைச் சாதியின் பெயரால், அடிப்படை உணவைக் கூட மறுத்து, அவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.




