
பெங்களூரு:
பெங்களூரு கடுபீசனஹள்ளியில் உள்ள தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக மாவள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) என்பவர் பணியாற்றி வருகிறார்.
உதவி கணக்காளராக இருந்த ஸ்ரீகாந்த், அந்த நிறுவனத்தின் மின்கட்டணத்தை செலுத்தும் பொறுப்பில் இருந்தார்.
அவர் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடிவரை செலுத்தி வந்தார்.
இந்தநிலையில் ஸ்ரீகாந்த் சமீபகாலமாகப் பணத்தை கட்டாமல் பணத்தை முறைகேடாகச் சூதாட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
இதனால் நிறுவனத்தில் தணிக்கை ஆய்வு நடத்த உத்தரவிட்டனர். தணிக்கை ஆய்வில் 7 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை ஆன்லைன் சூதாட்ட செயலியில் ஸ்ரீகாந்த் உணவு நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.7 கோடி செலுத்தி அந்தப் பணத்தை இழந்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ரூ.7 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தி ஸ்ரீகாந்த் நிறுவனத்தை ஏமாற்றி விட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
