
கேரள மாநிலம் கொச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 15 வயது சிறுவன் சக மாணவர்களின் தொடர் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி மாவட்டம் எர்ணாகுளத்தில் திருவாணியூர் பகுதியில் உள்ள குளோபல் பப்ளிக் பள்ளியில் படித்து வந்த மிஹிர் என்ற 15 வயது மாணவன் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி, 26 ஆவது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டான்.
பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய 1 மணி நேரத்திலேயே சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். இதனால் தாய் ராஜ்னா மகனின் மரணத்திற்கான காரணத்தைத் தேடத் தொடங்கினார்.
அவனது நண்பர்கள், பள்ளித் தோழர்கள் ஆகியோரிடம் விசாரித்து இறுதியில் ராஜ்னா விடையைக் கண்டுபிடித்துள்ளார்.
பள்ளியில் சக மாணவர்கள் செய்த தொடர் ரேகிங்கால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டான் என்று சிறுவனின் தாயார் ராஜ்னா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), மற்றும் கேரள முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில் ராஜ்னா புகார் அளித்துள்ளார்.
தனது மகனுடைய தற்கொலையின் பின்னணி குறித்து ராஜ்னா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், எனது மகன் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான குழந்தையாக இருந்தான்.
ஆனால் பள்ளியில் நடந்த கொடுமைகள் அவனைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
பிற மாணவர்கள் சிலர் மிஹிரை அவனது நிறத்தை வைத்தும் உடல் தோற்றத்தை வைத்தும் பள்ளியிலும், பள்ளிக்குப் போய் வரும் பஸ்சிலும் எனத் தொடர்ந்து ரேகிங் செய்துள்ளனர்.
தொடர்ந்து அடிப்பது, மன ரீதியாக வார்த்தைகளால் புண்படுத்துவது எனச் சகல விதமான கொடுமைகளுக்கும் மிஹிர் ஆளாகியுள்ளான்.
தற்கொலை நடந்த அன்றைய தினம், மிஹிரை பள்ளி கழிவறைக்கு அழைத்துசென்று கழிவறை இருக்கையை நாக்கால் நக்கச் செய்துள்ளனர்.
மிஹிரின் தலையைக் கழிவறைக்குள் திணித்துத் தண்ணீரை பிளஸ் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மிஹிர் இறந்த அன்று, இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் மாணவர் குழு, “fxxk நிக்கா அவன் நிஜமாவே இறந்துட்டான்” எனப் பதிவிட்டு லைக் மற்றும் சாட் செய்து கொண்டாடியுள்ளது.
இதை அறிந்தும் பள்ளி நிர்வாகம் தங்களின் நற்பெயரை இழக்காமல் இருக்க அமைதி காக்கிறது எனத் தாய் ராஜ்னா குற்றம்சாட்டியுள்ளார். ராஜ்னா கொடுத்த புகாரின் பேரில் திருப்புனித்துரா ஹில் பேலஸ் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இன்ஸ்டாவில் டெலிட் செய்யப்பட்டுள்ள அந்த மாணவர் குழு அக்கவுண்டிலிருந்து டிஜிட்டல் ஆதாரங்களை மீட்கும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டு வருகிறது.
