Electoral Bonds Case: தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டதற்கு அனைவரும் வருந்துவார்கள்!

Advertisements

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அனைவரும் வருந்தும் நிலை ஏற்படும் என்று, அந்தத் திட்டத்திற்கு ஆதரவாகப் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாஜக அரசு கொண்டுவந்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக ரத்து செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, ‘ஏ என் ஐ’ செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“தேர்தலில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு எதிராக விமர்சனம் செய்யும் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் தங்களது நிலைப்பாட்டுக்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த திட்டங்களைப் பற்றிய விவாதம் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துக்கு மாறாகத் தேர்தலில் கருப்பு பணத்தின் செல்வாக்கை குறைப்பதற்கான ஒரு படியாக இந்தத் திட்டம் உள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திரங்களை எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தது? எங்கே கொடுத்தது? என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். இது நல்லதா கெட்டதா என்பது விவாதத்திற்கு உரிய பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இந்தத் திட்டம்குறித்து  நேர்மையாகச் சிந்திக்கும்போது அவர்கள் அனைவரும் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதன் மூலம் தேர்தலில் இந்த நாட்டைக் கருப்பு பணத்தின் ஆளுமைக்குள் தள்ளிவிடும். இந்தத் திட்டம் நிதி புழக்கத்தை கண்டறிய வழிமுறை ஒன்றை வழங்கியிருந்தது. நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் பழிவாங்கலுக்கு அஞ்சாமல் பங்களிப்பதற்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் அளித்தது.

90களில் பாரதிய ஜனதா கட்சி பல பிரச்சினைகளைச் சந்தித்தது எனக்கு நினைவில் உள்ளது. எங்களுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று நினைத்தவர்களும் அதை வழங்குவதற்கு தைரியம் இல்லாமல் இருந்தன. இதையெல்லாம் நான் நன்கு அறிவேன்.

இப்போது பாருங்கள் தேர்தல் பத்திரம் இல்லை என்றால், பணம் எப்படி வந்தது, எங்குப் போனது? என்பதை கண்டறியும் அதிகாரம் எந்த அமைப்புக்கு உள்ளது?”.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையும் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை வரம்பு குறைப்பு உள்ளிட்ட கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும் பேட்டியின்போது பிரதமர் மோடி விவரித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *