காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம்!
காரைக்குடியில் காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. எட்டாம் வகுப்பு மாணவியான மேகலாவுக்கு கடந்த வியாழக்கிழமை பள்ளியிலிருந்து வந்தபோது காய்ச்சல் இருந்துள்ளது. மேகலாவை அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் காய்ச்சல் அடித்ததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேகலாவுக்கு, ரத்த பரிசோதனை எடுக்காமல் எந்த வகையான காய்ச்சல் என்றும் சொல்லாமல் மீண்டும் ஊசி போட்டு அனுப்பியுள்ளனர்.
காய்ச்சல் தீவிரமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேகலா நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.