
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சு சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரத்துக்காகத் தொடரப்பட்ட வழக்கு என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுகவில் பல கட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்தும், தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரியும் அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சு சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டதாகவும், இதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராகவும் அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவைப் பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

