
அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
சென்னை: அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் இன்று களை கட்டி காணப்பட்டன. அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.
அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை கழகத்தில் உள்ள அ.தி.மு.க. கொடியேற்றி வைத்துத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.இந்த விழாவில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இதனால் அ.தி.மு.க. தலைமைக் கழகம் களை கட்டி காணப்பட்டது.


