
காகித ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பு அளிக்காது என ஈரான் நாடாளுமன்ற கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி விமர்சித்துள்ளார்.
சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மெக்காவில் நடைபெற்றது. இதில், மெக்காவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆக்கிரமிப்பு செயலுக்கும் எதிரான கூட்டு தடுப்பாற்றலை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது. மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்வதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் நாடாளுமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பல ஆண்டுகளாக அமெரிக்கர்களுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவளித்த சவுதி அரேபியாவிற்கு இந்த ஒப்பந்தம் பாதுகாப்பை தராது என்று தெரிவித்துள்ளார்.
இதனை சவுதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீர்திருத்தினால், பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் ‘யாசிக்க’ வேண்டிய அவசியம் இருக்காது என்று விமர்சித்துள்ளார்.



