தமிழகத்தில் தற்போது வெப்பநிலை சற்று அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில பகுதிகளில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக வீடுகளில் மட்டுமின்றி, தொழில் மற்றும் விவசாயத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ள மின்வெட்டு புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், மின்தடைக்கான காரணங்கள் என்ன, புகார்கள் மீது உடனடியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மின்சார விநியோகத்தை சீரமைக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, மாநிலத்தில் நடைபெறும் மின் உற்பத்தி, வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு உள்ளிட்ட விவரங்களையும் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.
அதேபோல், அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை குறைப்பது, மின்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் எதிர்கால மின் தேவையை சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின் வாரிய தலைவர் அருண்ராய், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும், மின்சாரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். குறிப்பாக, மின்வெட்டு குறித்து பொதுமக்கள் புகார் அளித்த பின்னர், அந்தப் புகார் எவ்வளவு நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றடைகிறது, மின்தடையை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார்கள் தொடர்ந்து வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மின்னகம் மற்றும் மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தையும் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரத் தேவை எந்த அளவில் உள்ளது, மின் உற்பத்தி எவ்வளவு உள்ளது, மின் விநியோகம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், மின்தடை ஏற்படும் நேரங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான நிலவரம், மின்சாரத்தை சீராக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் மின்னகத்திற்கு நேரில் சென்று மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய இந்த ஆய்வு, மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


