“உண்மையான நட்சத்திரம் ஒளியைப் பரப்புபவரே” – ஜனாதிபதி அறிவுரை!

திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது செல்வாக்கை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்.

குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் திரைப்பட நட்சத்திரங்களை அதிகளவில் பின்பற்றுவதாக குறிப்பிட்டார். இதனால், மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விளம்பரப்படுத்துவதையோ, ஆதரிப்பதையோ பிரபலங்கள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வெற்றிகரமான கலைஞர்கள் ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையின் நன்மைகளை எடுத்துரைக்கும் போது, அவர்களை லட்சக்கணக்கான குழந்தைகளும் இளைஞர்களும் பின்பற்றுவதாக ஜனாதிபதி கூறினார்.  “உண்மையான நட்சத்திரம் ஒளியைப் பரப்புபவரே தவிர, இருளை அல்ல” என அவர் குறிப்பிட்டார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, சமூகத்தில் பிரபலங்களுக்கு இருக்கும் தாக்கத்தையும் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் முர்மு வலியுறுத்தினார்.

மேலும், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உருவாகி வரும் தரமான திரைப்படங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி, இந்திய சினிமா உலகத் தரத்திற்கான புதிய அளவுகோல்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார். திரைப்படத் துறையினருக்கு பொன்னான எதிர்காலம் அமைய வாழ்த்தும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *