80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து, குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரி ராதா. இருவரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். திரையுலகில் நீண்ட பயணத்திற்குப் பிறகு, தற்போது இருவரும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். அதே நேரத்தில், சொந்த தொழில் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையேயான தொழில் மற்றும் பணம் தொடர்பான விவகாரம் தற்போது காவல் நிலையம் வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது, நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், தான் ‘ஆர்.ஆர். கார்டன்’ என்ற பெயரில் தொழில் செய்து வருவதாகவும், சென்னை வரும்போதெல்லாம் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் தரைத்தளத்தில் தங்குவது வழக்கம் என்றும் ராதா தெரிவித்துள்ளார். தனது சகோதரி அம்பிகா நாயரும் அதே தரைத்தளப் பகுதியில் தங்கியிருந்ததாகவும், தனது பகுதிக்கு அவர் வந்து சென்று கொண்டிருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொழிலாளர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணம், தோட்டப் பராமரிப்புப் பொருட்களுக்கான செலவுகள் உள்ளிட்டவற்றைச் செலுத்துவதற்காக, தான் கையொப்பமிட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளார். தான் கையொப்பமிட்டு வைத்திருந்த காசோலைகளை தனது சகோதரி அம்பிகா நாயரும், சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் எடுத்துக்கொண்டு, அவற்றை பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்ததாக ராதா தனது புகார் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இது சட்டவிரோதமான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராதா அளித்த இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராதா தொடர்ந்த வழக்கு தொடர்பான செய்திகளில் ஒருமுறை ரூ.43 கோடி, மற்றொரு முறை ரூ.46 கோடி என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொகைகள் குறிப்பிடப்படுவதாக கூறினார்.
மேலும், ராதா தனக்கு காசோலை வழங்கியது உண்மை என்றும், அந்தக் காசோலையை அவரே நிறுத்தி வைத்ததும் உண்மை என்றும் அம்பிகா தெரிவித்தார். ஆனால், அந்தக் காசோலை ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை ராதா ஏன் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் நிறுவனம் தனது குழந்தை போன்றது என்று அம்பிகா குறிப்பிட்டார். அந்த நிறுவனத்திற்கு பெயர் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனவும் அவர் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸுக்கு சென்று பார்த்தபோது, அங்கு அந்தப் பெயர் இல்லாமல் வேறு பெயர் இருந்ததைப் பார்த்து தான் மிகவும் கலங்கியதாகவும் அம்பிகா கூறினார். ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் நிறுவனத்தில் பங்கு தொடர்பான பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வருவதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார்.
மேலும், ஏ.ஆர்.எஸ். என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இருப்பதாகவும், அதில் தனக்கும் பங்கு இருப்பதாகவும் கூறிய அவர், அந்தப் பங்கு தொடர்பான விவகாரம் குறித்து பேசுவதற்கும் ராதா தயாராக இல்லை என்று குற்றம்சாட்டினார். இதனிடையே, சகோதரி ராதா குறித்து தனிப்பட்ட முறையிலும் சில கருத்துகளை அம்பிகா தெரிவித்துள்ளார். “தங்கம்தான் ராதாவின் பலவீனம். தங்கத்தைப் பார்த்தால் ராதா ஒரு மாதிரி ஆகிவிடுவார்” என்று கூறிய அம்பிகா, தன்னுடைய தங்கம் நிறைய ராதாவிடம் இருப்பதாகவும், அது தொடர்பாகவும் ராதா எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ராதா தனது வீட்டில் இரவில் தூங்கும்போது கூட கைப்பையை பூட்டி, நம்பர் லாக் போடும் அளவுக்கு மிகவும் கவனமாக இருப்பவர் என்றும் அம்பிகா கூறினார். அப்படிப்பட்ட நிலையில், கையெழுத்திட்ட காலிக் காசோலைகளை வீட்டில் வைத்திருந்ததாக ராதா கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தனது சகோதரி ராதா தனக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தொடர்ந்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அம்பிகா தெரிவித்தார்.
ராதா செல்போனில் அழைத்தபோது தான் அழைப்பை எடுக்கவில்லை என்று கூறுவது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். ராதாவின் மகளின் திருமணத்தில் தான் முன்னின்று பணிகளை கவனித்ததாகவும், அப்படியிருக்க ராதா செல்போனில் அழைத்தால் தான் ஏன் அழைப்பை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் அம்பிகா கேள்வி எழுப்பினார்.
மேலும், இது குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சினை என்பதால், வீட்டு விஷயத்தை வீட்டுக்குள்ளேயே வைத்து முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்ததாக அம்பிகா கூறினார். இறுதியாக, ராதா தனக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காகவே 3 காசோலைகளை வழங்கியதாக அம்பிகா தெரிவித்தார்.
இதனால், ஒருபுறம் ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள காசோலை தொடர்பான புகார், மறுபுறம் அதற்கு அம்பிகா அளித்துள்ள மறுப்பு மற்றும் பணம், பங்கு, சொத்து தொடர்பான குற்றச்சாட்டுகள் என, இரு சகோதரிகளுக்கு இடையேயான விவகாரம் தற்போது பரபரப்பாக மாறியுள்ளது.
இந்தப் புகாரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.


