நேபாளத்திற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் : ஜனாதிபதி திரௌபதி முர்மு.!

நேபாள அரசின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, நேபாள குடியரசுத் தலைவர் ராமச்சந்திர பௌடலுக்கும், பொதுமக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடினமான சூழலில் நேபாளத்துடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நேபாள அரசின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் பாலன் ஷாவிடம் பேசி, நேபாளத்தைத் தாக்கிய வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தத் துயரமான நேரத்தில், இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
நேபாளத்திற்குத் தேவையான அனைத்து வகையான மனிதநேய உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நமது குழுக்கள் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *