Advertisements

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளை மீட்டுப் பாதுகாப்பாக அழைத்துவரத் தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.
நேபாளத்தில் போதேகோசி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டதில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற நூற்றுக்கு மேற்பட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் ஆற்றங்கரையோர வீடுகளும், வாகனங்களும் சிக்கியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், நேபாளத்துக்குச் சுற்றுலா சென்று அங்குச் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று கோரியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற ஐம்பதுக்கு மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள் உட்பட இந்திய சுற்றுலாப் பயணிகள் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து வெள்ளநிலைமை நீடிப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் தயாநிதி மாறன் சுட்டிக் காட்டியுள்ளார்.
Advertisements



