வறட்சியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள்!

Advertisements

Kuruvai cultivation | Nagapattinam | Thiruvarur | Farmer | Cauvery delta zone | Water scarcity | Drought

கேள்விக்குறியான குறுவை சாகுபடி.வறட்சியில் சிக்கித் தவிக்கும் நாகப்பட்டினம் விவசாயிகள்…

நாகப்பட்டினம் : சரியாக துார் வாராதது, போதிய தண்ணீர் பாயாதது போன்ற காரணங்களால், கடலில் ஆற்றுநீர் கலப்பதற்கு முந்தைய கடைமடையான, நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகள், வறட்சியில் சிக்கித் தவிக்கின்றன. விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பயிர்கள் கருவி விட்டதால், கால்நடைகளுக்கு மேயவிட்டுள்ளனர்.

‘தமிழக அரசை நம்பி, கடனை வாங்கியும், கைம்மாத்து பெற்றும், சாகுபடியை துவங்கினோம். இப்போது கால்நடைகளை வயலில் விட்டு, சோகத்தில் ஆழ்ந்துள்ளோம்’ என விவசாயிகள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

Kuruvai cultivation | Nagapattinam | Thiruvarur | Farmer | Cauvery delta zone | Water scarcity | Drought

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கடந்த ஜூன் 12ல், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரியின் கடைமடையான நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்திற்காக, கல்லணையில் 16ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து, நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக, 50 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குறுவை நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். நாகை மாவட்டத்தின் ஆறு ஒன்றியங்களிலும், 30 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பிலும், சில பகுதிகளில் நடவுப்பணிக்காக நாற்றாங்கால் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்தில் பாசன வசதி பெறும் வெண்ணாறு வடிநில கோட்டத்தில், வெட்டாறு கிளை நதிகளான ஓடம் போக்கி, தேவநதி பாசனத்தில்; நாகை, கீழ்வேளூர், அரிச்சந்திரா, முள்ளியாறு, வெள்ளையாறு, சித்தாறு பாசனத்தில் வேதாரண்யம், திருக்குவளை; காவிரி கிளை ஆறான திருமலைராஜனாறு பாசனத்தில் திருமருகல் ஒன்றியங்களும் பாசன வசதி பெறுகின்றன.

நடப்பு பருவத்திற்கு கர்நாடகா மாநிலம் தர வேண்டிய, இரண்டு மாதத்திற்கான 40 டி.எம்.சி., தண்ணீரில் 4 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே பருவத்தில் மேட்டூர் அணையில், 102 கனஅடியாக இருந்த தண்ணீர், நடப்பு பருவத்தில் 60 கனஅடி மட்டுமே உள்ளது. இந்தத் தண்ணீரும் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தாக்கு பிடிக்கும். நிலைமை இப்படி இருக்க, கல்லணையில் போதுமான தண்ணீர் இருப்பு குறைவால், நாளொன்றுக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், முறை வைத்துத் திறக்கப்படுகிறது.

Kuruvai cultivation | Nagapattinam | Thiruvarur | Farmer | Cauvery delta zone | Water scarcity | Drought

இதனால் கடைமடை பாசன ஆறுகள், கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் தண்ணீர் வந்தாலும், விளைநிலங்களுக்கு பாயும் அளவில் போதுமானதாக இல்லை. மொத்தம், 110 நாள் பயிரான குறுவை சாகுபடி துவங்கி, 60 நாட்கள் ஆகியும், விளைநிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால், கடைமடையில் பெரும்பாலான பகுதிகளில் விளைநிலங்கள் வெடிப்பு நிலங்களாக மாறி, குறுவை கருகி வருகிறது. பல இடங்களில் விதை நெல்கள் வெந்து போய், முளைப்பு திறன் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் மட்டும், கொத்து கொத்தாக இளம் பயிர்கள் முளைத்து உள்ளன.

நிலத்தடி நீர் இல்லாத கடைமடையில் காவிரி நீரை மட்டுமே நம்பி, விவசாயம் நடக்கும். காவிரி நீர் கைக்கொடுக்காததால் திருக்குவளை ஒன்றியம் வலிவலம், கொடியாலத்துார், கீரங்குடி பகுதிகளில் விவசாயிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கருகும் இளம் பயிர்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் விளைநிலங்களில் கால்நடைகளை மேயவிட்டுள்ளனர்.

”கர்நாடகா மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல், வெள்ள நீரை வெளியேற்றும் வடிகாலாகவே தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது. ”கருகும் பயிர்களைக் காப்பாற்ற, உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் திறக்க வேண்டிய காவிரியின் உரிமை பங்கை, தினந்தோறும் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அடிப்படையில் பகிர்ந்து, அன்றன்றே தமிழகத்திற்கு வழங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

”டெல்டா விவசாயிகள் நிலையைத் தமிழக அரசு உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” கடைமடையில் மாற்று தொழில் இல்லாத நிலையில், விவசாயத்தை மட்டுமே நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். குறுவை சாகுபடி கேள்விக்குறியானதால் இவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *