
கோவை:
கோவை அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிகளில் பாட்டரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் போன்றவை இடம்பெற்றன.
இந்த விழாவில், லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்த தமிழ் அறிஞர்களுக்கு உலக தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளைத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் கூறியது,
தமிழ் மொழி நமக்கு அடிப்படையாகவும், ஆணிவேர் எனும் அடையாளமாகவும் உள்ளது. தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்தை வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மத்திய அரசின் கீழ் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தார். அதன் பின்னர் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த நிகழ்வுக் கோவைக்குப் பெருமை சேர்க்கிறது.
கூட்டத்தில் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் இயக்குனர் அவ்வை அருள், மேயர் ரங்கநாயகி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
