
அணுசக்தி ஒப்பந்ததிற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டில் விலகியது. இதைத்தொடர்ந்து ஈரானுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்க நெருக்கடியைக் கொடுத்து வந்தது. இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் பத்தர் உடன் ,அமெரிக்கா, ஈரான் நாட்டின் பிரதிநிதிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய கட்டாயத்தில் ஈரான் உள்ளது என்றும் இதற்கு சம்மதிக்காவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தற்போது அமெரிக்காவின் பிரம்மாண்ட கடற்படை ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்றும் ஈரான் சரியான முடிவை எடுக்காவிட்டால் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
பேச்சு வார்த்தை நடக்கும் இந்த தருணத்தில், ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நாட்டின் பொருட்களுக்கும் அமெரிக்காவில் 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்ற அதிரடி உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


