
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி, மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என சுமார் நான்காயிரம் பேர் பங்கேற்றனர். இதில், பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸைத் தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, பொதுக்குழுவுக்கு நிறுவனரை கட்டாயம் அழைக்கப்பட வேண்டும் என்பது உட்பட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், பாமக-வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார். இதேபோன்று அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு பரிந்துரைத்தார். இதற்கிடையே, சமரச பேச்சை ராமதாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், அன்புமணி நிராகரித்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதன்பின் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “இது காசுக்காக சேர்ந்த கூட்டம் அல்ல. ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாயங்களுக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. வன்னியர் மட்டுமின்றி அனைத்து மக்களுக்காகவும் போராடுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சமுதாயங்களும் என் பின்னால் வாருங்கள், நீங்கள் நினைப்பவை நடக்கும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும். சில மாநிலங்கள் அதனைச் செய்துள்ளன. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இதனை வலியுறுத்தி கடுமையான போராட்டம் நடத்தப்படும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இதுபோன்ற பொதுக்குழுவை பாமக கண்டதில்லை. பாமக தொண்டர்களிடம் பேசியே எந்த முடிவும் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.



