
வட மாநில தொழிலாளர்கள் இங்கே அதிகளவில் வாக்காளர்களாக சேர்வதை தடுக்க வேண்டும் என அரியலூரில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
அரியலூர் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதனில், அமைச்சர் நேரு பேசியபோது, இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் வர உள்ள நிலையில் தீவிர வாக்குத் திருத்த பணியை மத்திய அரசு தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இதை மத்திய அரசு அவசரமாக செய்வதால் திமுக தலைவர் இதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய நேரு, ஒரு தேர்தல் ஆணையர் இருந்தார் என்றும் அவர் ஒட்டு மொத்தமாக ஆங்காங்கே ஓட்டுகள் நீக்கி சென்று விட்டதாக குற்றம் சாட்டினார். நமக்கு ஓட்டு இருந்தும், ஓட்டு போட முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதில், வட மாநில தொழிலாளர்கள் வாக்குகளை முழுவதுமாக சேர்வதை தடுக்க வேண்டும் என்றும் சிறுபான்மையினர் வாக்குகள் நமக்கு அதிமாக இருப்பதால் சிறுபான்மையினர் மக்களை சேர்ப்பதை தவிர்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுகவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பாஜக என்றும் அவர்கள் எல்லாம் நமக்கு செய்து விடுவர் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது என்றார்.
அதிமுகவின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் திமுகவினர் வாக்கு திருத்த பணியை மேற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என தெரிவித்தார்.


