DMK : செஞ்சி மஸ்தான் பதவியிலிருந்து திடீர் நீக்கம்… காரணம் என்ன தெரியுமா.?

K.S.Masthan
Advertisements

திமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், உட்கட்சி மோதல் காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பிதில், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி அவர்கள் மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ். (ஆர்த்தோ) அவர்கள் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதே போல விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர், (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் – 604 001) அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கும், அமைச்சர் மஸ்தானிற்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இது தேர்தல் நேரத்திலும் எதிரொலித்தது. குறிப்பாக இப்தார் நிகழ்ச்சியில் போது அமைச்சர் பொன்முடியும், மஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இது போன்று பல மோதல்கள் உட்கட்சியில் அதிகரித்திருந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பொன்முடி மகன் கெளதம சிகாமணி மாவட்ட பொறுப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *