
வாஷிங்டன்: தனது நிறுவனங்களில் ‛ ஆப்பிள்’ மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப் போவதாக டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதள நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் செயலிகளில் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாக அதிகாரியும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஓபன் ஏஐ -ன் தொழில்நுட்பத்தை ஆப்பிள், தனது சாதனங்களில் இணைத்தால், எனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல். நிறுவனங்களுக்கு வருபவர்கள், தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலில் இருக்கும் கூண்டில் வைத்துவிட்டு வர வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
