
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவும் கலந்து கொள்ள உள்ளனர். அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்னிறுத்தி வரும் நிலையில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறைந்தபட்சம் 35 தொகுதிகளாவது கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து திமுக, காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக முடியுமா கேள்வி எழுந்துள்ளது.



