தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகள்!
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று (10.11.2023) மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக செய்யப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) திரு.சிபி சக்ரவர்த்தி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.