சென்னை:
இன்று காலை 10 மணியளவில் விஜய்யின் தவெக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் இதில் மாவட்ட செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் விஜய்… இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் படம் ஹிட் அடித்தது. இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு விஜய் முழு நேர அரசியலில் குதிக்கப் போகிறார். இதற்காகத் தான் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.
தவெக ஆலோசனைக் கூட்டம்:
கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக மாநாடு கூட மிகப் பிரம்மாண்டமாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுக்க இருந்த பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் அவர் நேரடியாகப் பல அரசியல் கருத்துகளைத் தெரிவித்திருந்தர். பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதன் பிறகு அம்பேத்கர் புத்தக விழாவில் மட்டுமே அவர் கலந்து கொண்டார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கூடத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை அவர் நடத்தியே வருகிறார். பொறுப்பாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலம் முழுக்க மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 3 மாதங்களாக மாவட்ட வாரியாகச் சென்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
அதன்படி 2 அல்லது 3 தொகுதிகளுக்கு ஒரு மாசெ விகிதம் மொத்தம் 100- 105 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் தான் இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திற்குப் பிறகு, கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், விஜய் மக்கள் மன்றத்தில் நீண்ட காலமாக இருப்போருக்கும் மாற்றுக் கட்சியிலிருந்து வருவோருக்கும் உரசல் ஏற்படும் நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் நிலையில், இதில் கலந்து கொள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.