
இயக்குநர் மோகன்.ஜி, பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறனை சீண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பா.ரஞ்சித் பாராட்ட, மோகன்.ஜி விமர்சித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பாரதி இயக்கியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் அஞ்சலி சிவராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
பதின்ம வயது பெண்ணின் எண்ண ஓட்டங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் டீசரை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் பா.ரஞ்சித், “இது ஒரு துணிச்சலான முயற்சி” என வெற்றிமாறனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பா.ரஞ்சித்தின் இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி இயக்குநர் மோகன்.ஜி, “பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்தக் கும்பலுக்கு எப்போதும் புத்துணர்ச்சி.
வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகியோரிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? பிராமண அப்பா அம்மாவைப் பழிவாங்குவது ட்ரெண்ட் அல்ல.
உங்கள் சாதியில் உள்ள பெண்களை வைத்து இது போன்ற படங்களை இயக்கி, உங்கள் குடும்பத்தாரிடம் காட்டுங்கள்” என்று விமர்சித்திருந்தார்.
